
திண்டிவனத்தில் தேக்கு மரம் வெட்டி கடத்த முயன்ற 5 பேர் கும்பல் கைது!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 33 வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினராக சீனி சின்னசாமி இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் உடன் கூடிய தேக்கு மரத்தோப்பு சென்னை திருவண்ணாமலை புறவழிச் சாலையில் அமைந்துள்ளது.
இப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் அங்கு சுமார் 15 ஆண்டுகள் நன்கு வளர்ந்த தேக்கு மரத்தை நோட்டமிட்ட சிங்கனூர் பகுதியை சேர்ந்த குரு (35), சரத்குமார் (31), குலோத்துங்கன் (31), அஜித் குமார் (30), மணிகண்டன் (23) ஆகிய 5 பேர் டாட்டா ஏசி மினி லாரி (TN02AF8129) மற்றும் புல்லட் (TN05C Z6948) மூலம் மரத்தை நான்கு துண்டுகளாக வெட்டி கடத்த முயன்றனர்.
அப்போது அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரோஷனை காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீசார், சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் மரத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏசி மினி லாரி, புல்லட் மற்றும் தேக்கு மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
