
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 42 வயதான பாலகிருஷ்ணன், தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு லாரியை ஓட்டி வந்துள்ளார்.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து ஏலக்காய் மூட்டைகள் மற்றும் இதர பார்சல் பொருட்களை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கிச் சென்றபோது, உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் பகுதியில் லாரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரியில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இந்த லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட 162 ஏலக்காய் மூட்டைகளில் 67 மூட்டைகள் காணவில்லை என்றும், அவற்றின் மதிப்பு சுமார் 2 கோடியே 56 லட்சம் ரூபாய் என்றும் சரக்கு நிறுவனத்தின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணைக்காக பாலகிருஷ்ணன் கடந்த நவம்பர் 13ஆம் தேதி இரவு மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு விசாரணைக்காக காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், மறுநாள் நவம்பர் 14ஆம் தேதி அதிகாலை காவல் நிலையக் கழிவறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் தனது சட்டையைப் பயன்படுத்தி தூக்கிட்டதாகவும், உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
ஆனால், பாலகிருஷ்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தனது கணவருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அவர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை என்றும் அவரது மனைவி சுதா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் கழுத்தில் தூக்குக் கயிற்றுத் தடம் மட்டுமின்றி, முதுகுப் பகுதியில் ஐந்து காயங்கள் உள்ளிட்ட பல்வேறு காயங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மரணத்திற்கான இறுதி காரணத்தை மருத்துவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தடயவியல் மற்றும் திசு ஆய்வு முடிவுகள் நிலுவையில் உள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் முத்து உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், நவம்பர் 18ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் உசிலம்பட்டி தாலுகா ஆகிய நான்கு காவல் நிலையங்களின் சிசிடிவி பதிவுகளைப் பாதுகாத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது? பாலகிருஷ்ணனின் மரணத்திற்கான காரணம் என்ன? காவல்துறையினர் மீதான குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணையில் பதில் கிடைக்குமா?
என்பது தொடர்பாக சிபிசிஐடி விசாரணையின் முடிவுகள் வெளியாகும்போது முழு உண்மை தெரியவரும்.
CHOLATIMES.com
தமிழனின் குரல், உண்மையின் காலம்.
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்
