
செய்தி படம்: தென் பசார் இடிந்து விழுந்த கிராம நிர்வாக அலுவல கட்டடம்
திண்டிவனம், செப். 30*
திண்டிவனம் அடுத்த தென்பசார் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிட மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பணியில் இருந்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தென்பசார் ஊராட்சி. இது தென்பசார், அவளப்பட்டு ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கியது. சுமார் 700 குடும்பங்களை கொண்டுள்ள இந்த இரு கிராமங்களில் சுமார் 2000 வாக்காளர்கள் உள்ளனர்.
இங்கு வசிக்கும் விவசாயிகள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் விவசாய நிலத்திற்கு தேவையான சிட்டா அடங்கல், பட்டா மற்றும் வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான அரசு ஆவணங்களை பெற இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.
இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் கடந்த 2003-2004 சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் அபிவிருத்தி நிதியில் கட்டப்பட்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்தால் திறந்து வைக்கப்பட்டது. இப்போது இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் மோனிகா, கிராம உதவியாளர்கள் ராம்குமார் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் பணியில் உள்ளனர்.
இவர்கள் மூவரும் பணியில் இருந்த போது திடீரென்று அந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து பொல பொலவென விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூவரும் கட்டிடத்தை விட்டு வேகமாக வெளியேறினர்.
இவ்வாறு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த பாழடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
